லேபிள்கள்

சனி, 21 டிசம்பர், 2013

இனி நோ டென்ஷன்!

இனி நோ டென்ஷன்!


''டென்சன் ஆகாதீங்கண்ணே... லெஸ் டென்சன்... மோர் வொர்க்!'' - ஒரு படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். இன்றைய காலகட்டத்தில் இது எல்லோருக்கும் பொருந்தும். ''டென்ஷனா இருக்கு'' என்ற சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 
போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில், வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு, 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு, சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து, கார்ப்பரேட் களத்தில் இறங்கும் நமக்கு, சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன? அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்னைகள். அலுவலக வேலைச் சூழலில் தங்களது வாழ்க்கையைச் சிக்கவைத்துக்கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் டென்ஷன்! விளைவு, ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக்கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.
கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக, சந்தோஷமாக மாற்றிக்கொள்ளும் நான்கு வித்தைகளைச் சொல்கிறார்கள் மனநல மருத்துவர்கள் அசோகன் மற்றும் தியாகராஜன் இருவரும்.

தெளிவாகத் திட்டமிடலாம்!
 மன அழுத்தம் என்பது வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு விஷயம். மன அழுத்தம் வந்தாலும், மூளை தன்னைத் தயார்படுத்திக்கொண்டு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.
 குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையைச் செய்து முடிக்க முடியாத நிலையில்தான் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, நேர நிர்வாகம் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்பு, அதை எப்போது, எப்படி முடிக்கப்போகிறோம் என்று திட்டமிடுங்கள். எதை முதலில் செய்ய வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து பணியைத் தொடங்குங்கள். டென்ஷன் நெருங்கவே நெருங்காது.
 மன அழுத்தம் ஏற்பட்டால், முன்பு இதேபோன்ற சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதட்டம் விலகி தைரியம் பிறக்கும்.
 அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ, வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ, பலருக்கு மன அழுத்தம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்கேற்ப முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.
 மன அழுத்தம் இருந்தால், அந்த விஷயத்தைத் தீர்க்க முயற்சி செய்யவேண்டும். அதையே யோசித்து, விளைவுகளை எண்ணி, இன்னும் மன அழுத்தத்தை அதிகரித்துக்கொள்ளக் கூடாது. தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம், நம் குறிக்கோள்களைச் சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்
 நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங்களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காகத் தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டுவருவதும் தவறு. இதனால், குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.
 நாம் இல்லாத நேரத்தில், ஏதேனும் முக்கியமான விஷயம் நடந்து, அதை நாம் தவறவிட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இருப்பார்கள். இதுவும் தவறு. நீங்கள் இல்லை என்றாலும், உங்களின் பணி வேறு ஒருவரால் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
 'உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே' என்று ஒரு முதுமொழி உண்டு. அதன்படி யார் எந்த உதவி கோரினாலும், கூடுதல் பணியைக் கொடுத்தாலும், அது நம் கடமையாக இல்லாதபோதும், மரியாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்காதீர்கள். அந்த வேலையை உரிய நேரத்தில் செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந்தால், 'மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை' என்று சொல்லுங்கள்.

 பணியில் இருக்கும்போது, கூடுமானவரை அடிக்கடி டீ, காபி குடிப்பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னும் பதட்டப் பேர்வழியாக மாற்றுவதோடு, உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.
 அடுத்தவர்கள் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஒரு சிலருக்கு அலாதியான சந்தோஷம். அடுத்தவர்களைக் குறை கூறுவதை நிறுத்துங்கள். இதனால், நாம் செய்யவேண்டிய வேலைகள் மீது கவனம் திரும்பும். மனம் லேசாகும். தங்களுடைய திறமைக்குறைவினால் ஏற்படும் தாழ்வுமனப்பான்மையின் விளைவாகச் சிலர் வேண்டும் என்றே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருந்து விலகி இருப்பது நல்லது.
உற்சாகமாக உழைக்கலாம்!  
 ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்பு உணர்வுடன், கூர்மையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் ஒருவித த்ரில் நம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மனநிலைக்கு நம்மை மாற்றும்.

 சக மனிதர்களுடன் அன்புடன் பழகுங்கள். இதனால், மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்துத் தீயகுணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.
  எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக, பொழுதுபோக்காகச் செய்யுங்கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலைகள்கூட எளிதாக மாறும். வேலை செய்யும் சோர்வே இருக்காது.
 சிலர் இயல்பிலேயே சின்ன விஷயத்துக்கும் அதிகமாகப் பதட்டப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள், தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பதட்டம் குறைந்து, எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற முடியும்.
  'எதிலும் மீண்டு வருவோம்' என்று எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கி றோமோ, அந்த அளவுக்கு மன அழுத்தம் குறையும்.
வேலையில் வெற்றி காணலாம்!
 சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனப் போட்டியிடுவது நல்ல விஷயம்தான். இதற்கு ஒரே வழி, நாம் நம் தகுதியை வளர்த்துக்கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதும், அவர்களை மட்டம்தட்டும் விதத்திலும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.
 எந்தக் காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப்போடாதீர்கள். அந்த வேலை பிடிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக முடித்துக் கொடுங்கள். 'ஐயோ... இந்த வேலை செய்யவே எனக்கு பிடிக்கலை...' என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்துகொள்ளும்.
 மன அழுத்தத்தைக் குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால், நிலைதடுமாறுதல், தரம் தாழ்ந்துபோதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தனமாக நடந்துகொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.
 மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படுத்திக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். 'நான் இப்படித்தான் இருப்பேன்...' என்று வறட்டுப்பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.  
 குறுகிய வழிகளை யோசிக்கக் கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால், 'நம்மால் வாங்க முடியவில்லையே' என்று வருத்தப்படலாம். ஆனால், 'வேறு ஒருவர் வாங்கிவிட்டார், அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது' என்கிற ரீதியில் யோசிக்கக் கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக்கொள்ளுங்கள்.
- ரேவதி, உ.அருண்குமார்
 மருந்தும் மன அழுத்தத்தைக் குறைக்கும்
''நம் மூளை நரம்பு மண்டலத்தில் 'அட்டானமஸ் நெர்வஸ் சிஸ்டம்' (Autonomous nervous system)  என்று ஒரு பகுதி உள்ளது.  இதில் 'பீட்டா'(Beta) என்ற நரம்புத் தொகுதி கூடுதலாகத் தூண்டப்பட்டு ஒரு சிலருக்கு இதயத் துடிப்பு அதிகரிப்பது, அதிகம் வியர்ப்பது, தசை துடிப்பது, கை கால் நடுங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்படும். இதை மருத்துவர்கள் 'பீட்டா பிளாக்கர்' Beta Blocker (Propranolol/Atenolol) எனும் ஒரு வகை மருந்தினால் கட்டுப்படுத்துவது உண்டு. அதேபோல் ஆங்சைட்டி என்ற மனம் சார்ந்த பதட்டம் ஏற்படும் நபருக்கு 'மைனர் ட்ரான்க்குலைஸர்' (Minor Tranquillizer) எனும் ஒரு வகை மன அமைதிக்கான மாத்திரைகளை சில காலம் பயன்படுத்துவது நல்ல பயனைத் தரும். மருத்துவரைக் கலந்து ஆலோசித்து அறிவுரையின் பேரில் மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது நல்லது


--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts