லேபிள்கள்

சனி, 27 ஜூலை, 2013

அலுவலகத்தில் நீங்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகள்!

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் நாம் செய்யும் சிறு சிறு தவறுகள் கூட நம் மன நிம்மதியை கெடுத்துவிடும். சிறப்பான அலுவலக சூழல் ஏற்பட நாம் கண்டிப்பாக பின்பற்றவேண்டிய பத்து வழிமுறைகள் இங்கே உள்ளன. இதனை பின்பற்றினால் அலுவலகத்தில் அனைவரும் விரும்பக்கூடிய சிறந்த மனிதராக நாம் பெயர் எடுக்கலாம். என் அலுவலக அனுபவங்கள் அதற்கு சாட்சி.

நல்ல வேலையை ரகசியமாக தேடுங்கள்!
தற்போது நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் வேலை உங்களுக்கு திருப்தி இல்லாமல் இருக்கலாம். அதில் தவறொன்றும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் விருப்பம் இல்லாமல் ஒரு வேலையை செய்வது என்பது மிகப்பெரிய கொடுமையாகும். ஆனால் நீங்கள் வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதை பற்றி  அலுவலகத்தில்  மற்றவர்களுடன் விவாதிக்கவேண்டாம். உங்களுக்கு புதிய வேலை கிடைக்காத பட்சத்தில் நீங்கள் பழைய வேலையிலேயே தொடர நேரிடலாம். அப்போது நீங்கள் விருப்பம் இல்லாமல் வேலையில் நீடிக்கிறீர்கள் என்ற விஷயம் அலுவலகம் முழுவதும் தெரிந்திருக்கும். அது உங்கள் மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்தலாம். 

கிசுகிசு, வதந்தி வேண்டாம்!
நீங்கள் ஒருநாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் செலவிடுகிறீர்கள். சக பணியாளர்களின் அந்தரங்க தகவல்கள், விருப்பு வெறுப்புகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எக்காரணத்தை முன்னிட்டும் அதனை அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அம்பலப்படுத்த வேண்டாம். அலுவலகத்தில் பேசக்கூடிய கிசுகிசு மிகவும் வேகமாக பரவக்கூடியது. முதுகுக்கு பின்னால் பேசக்கூடியவர், நம்பிக்கைக்குரியவர் அல்ல என்று பெயர் எடுப்பதை தவிர்த்துவிடுங்கள்.

செக்ஸ் சப்ஜெக்ட் பேசாதீர்கள்!
செக்ஸ் பற்றிய விஷயங்களை நீங்கள் அலுவலகத்தில் பேச வேண்டாம். செக்ஸ் என்பது உங்களுக்கும், உங்கள் மனைவிக்குமான அந்தரங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருக்கலாம். ஆனாலும் உங்கள் தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கைகள் பற்றி அலுவலகத்தில் பேசவேண்டாம்.

மேலதிகாரிகளிடம் புகார் செய்யாதீர்கள்!
நீங்கள்  செய்யும் வேலையில் உங்களுக்கு பல மனக்குறைகள்  இருக்கலாம். ஆனால் அவற்றை அடிக்கடி மேலதிகாரிகளிடம் புகார்களாக எடுத்துச்செல்லாதீர்கள்  அல்லது எதிர்மறையாக விமர்சிக்காதீர்கள். அது நீங்கள் பார்த்துகொண்டிருக்கும் வேலையை மதிக்கவில்லை அல்லது வெறுக்கிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடும். நீங்கள் செய்யும் வேலையை வெறுக்கிறீர்கள் என்ற எண்ணம் சக ஊழியர்களிடையே அல்லது வாடிக்கையாளர்களிடையே ஏற்படுமானால் அது உங்களின் வளர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும். மேலும் உங்களின் மேலதிகாரி உங்களுக்கு பதவிஉயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அது காரணமாக அமைந்துவிடலாம்.

சம்பளம்  உஷ்!அது ரகசியம்!
உங்கள் அலுவலகத்தில் ஒரே மாதிரியான பணி செய்யும் அலுவலர்கள் வெவ்வேறு விதமான ஊதியம் பெறலாம். உங்கள் அலுவலகத்தில் மற்றவர்களைவிட நீங்கள் அதிகமான சம்பளம் பெறுகிறீர்களா? அல்லது குறைவான சம்பளம் பெறுகிறீர்களா? என்பதை பற்றிய விவரம் உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அது மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம். நீங்கள் பெறும் சம்பளம் அதிகமாக இருந்தால் மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படலாம். மற்றவர்களைவிட குறைவாக இருந்தால் உங்களை ஏளனம் செய்யலாம். எனவே உங்கள் ஊதியத்தை மற்றவர்களிடம் கூறாதீர்கள்.

நிதிநிலைமை பற்றி பேசவேண்டாம்!
ஊதிய விவரம் எவ்வாறு ரகஸியமானதோ, அதைப்போன்று உங்களின் குடும்ப நிதிநிலைமை பற்றியும் அலுவலகத்தில் பேசவேண்டாம். உதாரணமாக குடும்பத்தில் நிதி பிரச்சினை இருந்தால் கூட அதனை உங்கள் குடும்பத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களின் பிரச்சினை. அது மற்றவர்களுக்கு தெரியவேண்டியதில்லை. நீங்கள் அவ்வாறு சொல்வதை சக ஊழியர்கள் விரும்பாமல் கூட இருக்கலாம். ஒன்றிரண்டு பேர் உங்களின் நிதிநிலைமை பற்றி அறிந்துகொள்வது உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் சக ஊழியர் அனைவருக்கும் தெரிந்தால் அது தேவையில்லாத வதந்திகளையும், கிசுகிசுக்களையும் அலுவலகத்தில் பரப்பிவிடலாம்.

குடும்ப பிரச்சினை அலுவலகத்தில் வேண்டாம்!
உங்களுக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சினை இருக்கலாம். நீங்கள் எப்போதும் வெறுப்பான மனநிலையில் இருக்கலாம். அல்லது திருப்தி இல்லாமல் இருக்கலாம். உங்கள் பிரச்சினை எதுவாகவும் இருக்கலாம். எந்த பிரச்சினைகளையும் நீங்கள் உங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அல்லது மருத்துவர்களுடனும் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்திற்கு அவற்றை கொண்டுசெல்லாதீர்கள்.

அரசியல் வேண்டாம்!
அரசியல் மக்களை பிரிக்கிறது. அலுவலகத்தில் அரசியல் பற்றிய விவாதங்களில் ஈடுபடாதீர்கள். நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற விவரத்தை கூறவேண்டாம். நாளிதழ்களில் வெளியான அரசியல் செய்திகள் குறித்து உங்கள் கருத்துக்களை கூறுதல், சக ஊழியர்களிடம் நீங்கள் வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று விசாரித்தல் போன்றவைகளை தவிர்த்துவிடுங்கள். சில ஊழியர்கள் அரசியலை உணர்ச்சிபூர்வமாக அணுகக்கூடும். அதே ஊழியர்கள் உங்களின் தினசரி அலுவலகப் பணிகளுக்கு உதவி செய்பவராக இருக்கலாம். உங்களின் அரசியல் கருத்துக்கள் அவரை உங்களிடமிருந்து விலகச்செய்யலாம்.

உணர்ச்சியை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்!
நீங்கள் ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் அதிகமான நேரத்தை செலவிடவேண்டியிருக்கும். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கலாம். அது உங்களுக்கு மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அதற்காக மற்றவர்கள் மீது நீங்கள்  கோபத்தைக் காட்டுவதை ஏற்க முடியாது.  உங்களின் உணர்ச்சிகளை அலுவலகத்தில் உள்ளவர்கள் மீது வெளிக்காட்டாதீர்கள். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள்  அவர்களுடன் பணிபுரிய வேண்டியதிருக்கலாம். ஒரு நாள் கோபம் பல ஆண்டுகள் நல்லுறவை பாதிக்கலாம். மேலும் உங்களுடைய உணர்வு வெளிப்பாடு சக ஊழியர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மீது  தவறான எண்ணங்கள் அலுவலகத்தில் உருவாவது தவிர்க்கப்படவேண்டும்.

--
*more articles click*
www.sahabudeen.com


கருத்துகள் இல்லை:

கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts