லேபிள்கள்

திங்கள், 9 ஏப்ரல், 2018

நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!

நேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்!

ஒரு திருமணம். உறவினர்களை அழைத்திட வேண்டும். ஆனால் அவர்களின் உறவினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில்!
என்ன செய்கிறார்கள் நம்மவர்கள்? கார் ஒன்றை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று வீடு வீடாக ஏறி இறங்கி திருமணத்துக்கு அழைக்கிறார்கள். பல ஆண்டுகளாக இதுவே வழக்கமாக இருந்து வருகிறது.
மயிலாடுதுறையில் திருமணம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
காரைக்கால் நாகூர் வரை ஒரு மார்க்கம். சீர்காழி சிதம்பரம் வரை இன்னொரு மார்க்கம். ஆடுதுறை கும்பகோணம் வரை இன்னொரு மார்க்கம். பூந்தோட்டம் திருவாரூர் என்று இன்னுமொரு மார்க்கம்.
இதில் வேடிக்கை என்னவெ

ன்றால் இந்த மார்க்கங்களுக்கெல்லாம் கட்டுப்படாத ஊர்களில் உறவினர்கள் இருந்தால்
ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்று அலைந்து திரிகிறார்கள் பெற்றவர்கள்.
உறவினர் ஒருவர் 150 கிமீட்டருக்கு அப்பால். அந்த ஒரே ஒரு உறவினரை அழைப்பதற்காக 300 கிமீ பயணம் மேற்கொள்கிறார்கள் தாயும் தந்தையும்.
இப்படி திருமணத்துக்கு அழைப்பதற்கென்று நாட்கணக்கில் வாரக்கணக்கில் சிரமம் எடுத்துக்கொள்கிறது சமூகம்.
சரியாக உண்ணாமல், சரியாக தூங்காமல் அவதிப்படுகிறார்கள் பெற்றவர்கள். ஒருவருக்கு மாரடைப்பே வந்து விட்டது சமீபத்தில்!
நேரில் வந்து அழைத்தால் தான் வருவார்களாம். "வேணும்னா வாங்க!" என்பது தான் அவர்களின் வாதம்!
இந்த முறையை மறு பரிசீலனை செய்தால் என்ன என்பதற்கே இந்தப் பதிவு.
நண்பர் ஒருவர் வெளியூரில் உள்ள உறவினர் வீடு ஒன்றுக்கு பத்திரிகை வைக்கச் சென்ற போது அந்த வீடு பூட்டியிருந்ததாம். கதவிடுக்கில் பத்திரிகையை செருகி வைத்து விட்டு வந்து விட்டாராம் அவர். ஊருக்கு வந்து போன் செய்தாராம். அவர் சொன்னாராம்: இப்போது நான் வீட்டில் தான் இருக்கிறேன் இன்னொரு தடவை நேரில் வாருங்கள் என்றாராம்!
இன்னொரு நண்பர். அவர் மகளுக்குத் திருமணம். அவருடைய உறவினர் ஒருவர் வீட்டிலும் திருமணம். உறவினர் வீட்டுத் திருமணத்துக்குச் சென்ற நண்பர் தன் மகளின் திருமணப் பத்திரிகையை திருமண மண்டபத்திலேயே வைத்துக் கொடுக்க என்ன இங்கே வைத்து பத்திரிகையைக் கொடுக்கிறீங்க என்று பத்திரிகையையே வாங்க மறுத்து விட்டாராம் அவர்!
அழைக்கப்பட வேண்டியவர் சம்பந்தம் செய்து கொண்ட உறவினராக இருந்து விட்டால் இன்னொரு பிரச்னை. நேரில் வந்து அழைக்காவிட்டால் மருமகனையோ மருமகளையோ கூட அனுப்பாமல் தடுத்து விடுகிறார்களாம் சம்பந்தி புரத்து சொந்தங்கள்.
நேரிலேயே வந்து அழைப்பதைத்தான் மரியாதையின் குறியீடாகப் பார்க்கிறது சமூகம். இதில் மரியாதை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது! வெளியிலே தான் சிரித்துக் கொள்கிறார்கள்; உள்ளுக்குள்ளே கடுமையான வன்மம்! இதில் எங்கிருக்கிறது மரியாதை?
இந்தப் போலி மரியாதைக்கு பயந்து அலை அலை என்று அலைகிறது சமூகம். இந்த அலைச்சலால் ஏற்படுகின்ற சிரமங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு!
அஞ்சல் வழியே பத்திரிகை அனுப்பி விட்டு தொலைபேசியில் நினைவூட்டி விட்டால் அது போதாதா இந்த சமூகத்துக்கு?
இன்னும் ஒரு படி மேலே போய் மின்னஞ்சல் வழியே அனுப்பி விட்டால் பத்திரிகை அடிக்கும் செலவையும் மிச்சப்படுத்தி விடலாம் தானே?
அதே நேரத்தில் இப்படியும் சிலர் இருக்கவே செய்கிறார்கள். நேரில் வந்து அழைக்க உறவினர்கள் சிரமப்படுவதைப் பார்க்கும் இவர்கள், பரவாயில்லை. மின்னஞ்சலிலேயே அனுப்பி விடுங்கள் நான் வந்து விடுகிறேன் இன்ஷா அல்லாஹ் என்று சொல்பவர்களும் நம்மில் உண்டு!
சுமார் முப்பது ஆண்டுகள் இருக்கும். என் தூரத்து உறவினர் ஒருவர் இப்படி செய்தார். திருமணப் பத்திரிகை அனைத்தையும் அஞ்சல் வழியே தான் அனுப்பி வைத்தார். பத்திரிகையுடன் ஒரு சிற்றேட்டையும் அச்சடித்து இணைத்திருந்தார் அவர்.
"நேரில் வந்து அழைத்திடும் சிரமங்களைத் தவிர்ப்பதற்காகவே பத்திரிகையை அஞ்சல் வழியே அனுப்புவதாகவும், இதனை நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்."
அனைவரும் வந்து திருமணத்தைச் சிறப்பித்தது அன்றைய சமூகம்! ஆனால் அது ஏனோ மற்றவர்களால் பின்பற்றப் படாமலேயே போய் விட்டது.
இப்போது அதற்கு நேரம் வந்து விட்டது! புதிய தலைமுறை சிந்திக்கட்டும்!
பழசுகள் திருந்தும் என்ற நம்பிக்கை எனக்கு அறவே இல்லை!
– S.A. Mansoor Ali, Nidur


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts