லேபிள்கள்

செவ்வாய், 19 மே, 2020

அல்லாஹ்வின் உதவி யாருக்கு ?

கஷ்ட நேரங்களிலும், சோதனை கட்டங்களிலும் அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் விரைவாக கிடைக்க வேண்டுமென்பது முஃமின்கள் அனைவரின் எதிர்பார்ப்பும், பிரார்த்தனையுமாகும். எப்போதெல்லாம் முஸ்லிம் சமுதாயம் நெருக்கடிகளுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்படுவார்களோ, அப்போதெல்லாம் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்பது தான் அவர்களின் முழக்கமாக இருக்கும். இந்த முழக்கத்தை நபிமார்களுக்கு அடுத்தபடியாக இந்த சமுதாயத்தின் சிறந்தவர்களாக இருந்த நபித்தோழர்கள் சோதனைகளுக்கு ஆளாக்கப்பட்டும் மிக கடுமையான முறையில் உலுக்கப்பட்டும் எதிரிகளால் நான்கு புறங்களிலும் சூழப்பட்டு அவார்களின் உயிர் தொண்டைக்குழியை அடைந்த தருணத்தில் அவர்கள் எழுப்பிய முழக்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்
உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குா்ஆன்-2:214)
இவ்வசனத்தில் முஸ்லிம்களுக்கு சோதனைகளும் நெருக்கடிகளும் எற்படும்போது, அதிலிருந்து மீளுவதற்காக அல்லாஹ்விடம் உதவி கோரவேண்டும். அப்படி உதவி கோரினால் அல்லாஹ் உதவி செய்வான் என்று வாக்களிக்கிறான். இன்னும், முஸ்லிம்களோடு போர் தொடுக்கும் எதிரிகளான காஃபிர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்வான் என்பதும் அவனது வாக்குறுதியாகும்.
இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள சில பயன்கள் குறித்து அஷ்ஷேக் ஸாலிஹ் அல் உஸைமின் அவர்கள் கூறினார்கள்.
1.உதவியை மனிதன் அதை செய்வதற்கு ஆற்றலுடையவனிடம் தான் கேட்க வேண்டும் அது அல்லாஹ் மட்டும் தான்
2. தூதர்களின் வழிதான் தூதர்களை நம்பிக்கைக்கொண்டவர்களின் வழிமுறையும். அவர்கள் கூறியதைத்தான் நம்பிக்கையாளர்களும் கூறவேண்டும். "அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு"
3.அல்லாஹ்வின் பரிபூரண ஆற்றலை உறுதி செய்வது. "நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது"
4. உதவி சமீபத்திலே இருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு அல்லாஹ் அதனை தாமதிப்பது அவனது ஹிக்மத்தாகும்.
5.அல்லாஹ்விற்காக சோதனைகளை பொறுமையாக தாங்கிக்கொள்வது சொர்க்கத்தில் நுழைய காரணமாகும்.சொர்க்கத்தில் நுழையும் வரை பொறுமையாக இருங்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருளாகும்.
6.உதவியைக்குறித்து முஃமின்களுக்கு நற்செய்தியை கூறுகிறது தங்களுக்கு சொல்லப்பட்ட நற்செய்தியை எதிர்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள் அதில் உறுதியாக இருப்பதற்கு இது அவர்களுக்கு வலிமையாக்குகிறது.
தஃப்ஸீர் சூரத்துல் பகரா
அல்லாஹ்வின் உதவி ஈமானை வாதிடுபவர்களுக்கோ, இஸ்லாமை வாதிடுபவர்களுக்கோ கிடைக்கக்கூடியதல்ல மாறாக யார் உள்ளத்தில் ஈமானை உறுதிபடுத்தி இஸ்லாமை தனது உடல் உருப்புகளால் செயல்படுத்துவார்களோ அவர்களுக்குத்தான் கிடைக்கும்.
அல்லாஹ் கூறுகிறான், உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குா்ஆன் 24:55)
இமாம் இப்னு கஸீர் அவர்கள் கூறினார்கள்.
இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து அல்லாஹ்வின் தூதருக்கு வழங்கிய வாக்குறுதியாகும் அவரது சமுதாயத்தை ஆட்சியாளர்களாக ஆக்குவான். அதாவது மக்களுக்கான தலைவர்களாகவும் அவர்களது பொறுப்பாளிகளாகவும் ஆக்குவான். அவர்கள் மூலம் நாடு நலம்பெறும், மனிதர்கள் அவர்களுக்கு கட்டுப்படுவார்கள். இன்னும் அவர்களின் அச்ச நிலையைப் போக்கி அமைதியையும் ஆட்சியையும் ஏற்படுத்துவான். இந்த வாக்குறுதியை அல்லாஹ் நிறைவேற்றினான். அல்லாஹ்வின் தூதர் மரணிப்பதற்கு முன்னரே மக்காவையும், கைபரையும், பஹ்ரைனையும் இன்னும் அரேபிய தீபகற்பத்தையும் யெமனின் முழுவதுமாகவும் வெற்றிகொண்டார்கள். மேலும் ஹஜரின் மஜூஸிகளிடமும், ஷாமின் பல பகுதிகளீருந்தும் ஜிஸ்யாவை கைபற்றினார்கள். இன்னும் ரோமின் அரசரான ஹிர்கல்,மிஸ்ரின் அரசரான மகூகூஸ் இன்னும் நஜாஷி மன்னர் ஆகியோர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நேர்வழியைக் காட்டினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் மரணித்த பின்னர் அவரது கலீஃபாவான அபூபகர் அவர்கள் இப்பொறுப்புகளை நிறைவேற்றினார்கள். தஃப்ஸீர் இப்னு கஸீர்
அல்லாஹ்வின் உதவியைப்பெறுவதற்குரிய வழிகள்:
1.ஈமானும் நற்செயலும்:
அல்லாஹ் கூறுகிறான், உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரைஆட்சியாளர்களாக்கியது போல், நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; "அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;" இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம். (அல்குர்ஆன்-24:55)
2.அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவி செய்வது:
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால், அவன் உங்களுக்கு உதவி செய்து உங்கள் பாதங்களையும் உறுதியாக்கி வைப்பான். அன்றியும், எவர்கள் நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய செயல்களை அவன் பயனற்றவையாகவும் ஆக்கிவிடுவான்.(அல்குர்ஆன்-47:7-8)
3.அல்லாஹ்வின் மீது தவக்குல் வைத்தல் அத்துடன் முயற்சியும் வேண்டும்:
சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! – நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான். (அல்குர்ஆன்-3:159)
4.பொறுப்பு சுமத்தப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் கலந்தாலோசனை செய்வது:
பரிபூராண அறிவும் சரியான தீர்வும் தன்னிடமிருந்தும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க தம்முடைய தோழர்களோடு ஆலோசனை செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்
அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்.(அல்குர்ஆன்-42:38)
5.எதிரிகளைச் சந்திக்கும் போது நிலைகுலையாமல் உறுதியாக இருப்பது:
மக்களே எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பளித்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்களின் நிழல்களில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டு, 'இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! (ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள். ஸஹீஹுல் புஹாரி 2966
6.வீரமும் அற்பணிப்பும்.
அல்லாஹ்வின் உதவி வேண்டுமென்றால் அதற்கு நாம் அற்பணிப்பையும் வீரத்தையும் வெளிப்படுத்த வேண்டும். நம்பிக்கையாளர்களை பொறுத்த வரை, மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டார்கள். ஏனெனில் இவ்வுலகில் நாம் மரணிக்கத்தான் வந்துள்ளோம். மரணம் நம்மை எங்கிருந்தாலும் வந்தே தீரும்.
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன்-4:78)
7. துவாவும் திக்ரும்
அல்லாஹ்வின் உதவியைப்பெற நம்பிக்கையாளர்களுக்கு ஆகச்சிறந்த வழி அவனிடம் மன்றாடுவது தான். ஏனெனில் அல்லாஹ் மட்டும் தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவன் அவன் நாடினால் மட்டும் தான் நமது முயற்சிகளும் வெற்றியாகும்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.(அல்குர்ஆன்-2:186)
8.அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவது
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன்-24:52)
9.ஒற்றுமையும் முரண்பாடின்மையும்
அன்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள், மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள், அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள், மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும், ஆகவே, நீங்கள் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன்-8:46)
10.பொறுமை
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன்-3:200)
11.உளத்தூய்மை
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே, அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்-8:47)
நம்பிக்கையில்லாமல் நற்செயல்கள் இல்லாமல் அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா? அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு உதவி செய்யாமல் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்காமல் அல்லாஹ்வின் உதவியை எதிர்பார்க்கலாமா?
அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணித்து அல்லாஹ்வின் உதவியை பெற முடியுமா?
அல்லாஹ்வின் உதவி முஃமின்களுக்குத்தான் என்றிருக்கும் போது அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்காமல் ஒருவர் முஃமினாக இருக்க முடியுமா?
இன்னும் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்றும் சோதனை கட்டங்களில் பொறுமைக்காக்க வேண்டுமென்றும் அல்லாஹ் கூறியிருக்க அதை கடைபிடிக்காமல் இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்குமா?
இவை எல்லாவற்றிர்கும் மேலாக அல்லாஹ்விட கை ஏந்தாமல் அவனிடம் மனம் உருகி பிரார்த்திக்காமல் அல்லாஹ்வின் உதவி வருமா?
எனவே முஃமின்களே அல்லாஹ் நம் மீது சுமத்திய கட்டளைகளை நிறைவேற்றவோம் அல்லாஹ் வாக்களித்த அவனின் உதவியை எதிர்பார்ப்போம். இன் ஷா அல்லாஹ்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts