லேபிள்கள்

சனி, 11 ஆகஸ்ட், 2018

பொருளீட்ட ஓடும் ரேஸ் குதிரைகள்..! ஆண்களின் மனஅழுத்தம் அறிவோம்!!

பொருளீட்ட ஓடும் ரேஸ் குதிரைகள்..! ஆண்களின் மனஅழுத்தம் அறிவோம்!!
மிக அதிக வசதிபடைத்த பங்களாக்களுக்கு இடையில் வாடகை வீடு ஒன்றில் வசிப்பது, மனிதர்கள் இல்லாத கிரகத்தில் ஏலியனிடம் மாட்டிக்கொண்டதைப் போன்றது. பொதுவாக வீட்டுக்குள் இருப்பதைத்தான் நான்கு சுவர்களுக்குள் இருப்பதாகச் சொல்லிக்கொள்வோம். ஆனால், நான் இருந்த பகுதியில் என் வீட்டைவிட்டு வெளியே வந்தாலும், பங்களாக்களைச் சுற்றிய மதில் சுவர்களும், முகம் பார்க்க முடியாத கண்ணாடிக் கதவுகளுமாகவே இருந்தன.

எனக்கு மட்டும் கிளாஸோஃபோபியா (Glossophobia) இருந்திருந்தால், குறைந்தது ஒரு கி.மீ தூரமாவது ஓடிவர வேண்டும். அப்போதுதான் வெளி உலகைப் பார்க்க முடியும். அதற்கிடையே தடுக்கி விழுந்தாலும், பங்களா விசுவாசிகளான காவல் நாய்கள் நம்மைக் குலைத்தே கொன்றுவிடும்.


மனிதர்களைச் சுவாசித்துப் பழகிய எனக்கெல்லாம் இந்தச் செயற்கைச் சுவாசம் கொஞ்சம் அசௌகரியமாகவே இருந்தது. நல்லவேளையாக ஒரு வயதான தம்பதி எங்கள் மாடி வீட்டுக்குக் குடிவந்தனர். பதினோறு மாத கான்ட்ராக்ட். அதற்குள் தங்களின் சொந்த வீட்டை அப்பார்ட்மென்ட்டாக்கி, அதில் ஒரு பகுதியை வாடகைக்குவிட திட்டம் போட்டிருந்தனர். இதற்குப் பெரியவரின் ரிட்டர்யர்மென்ட் பணம் பாதியும், மீதி ஃபாரின் பிள்ளைகளின் பணமும் எனப் பங்கீடாகவே அது அமைந்திருந்தது. ஆக ஒரு வருடம் இங்குதான் இருக்கப்போவதாக அந்தப் பாட்டி சொன்னார். ஒரு வருட மகிழ்ச்சி என்பது தவணையாகவே இருந்தாலும், சமைப்பதைப் பகிர்வது, போக வரக் குரல் கொடுப்பது எனப் பாட்டியின் குரல் பங்களாக்களின் வெற்றிடத்தில் வீணையானது. நான் இருக்கும் இடத்திலிருந்து ஐந்து கி.மீ தூரத்தில் இருந்த குளத்தூரில் வீட்டை புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள் அவர்கள். அதில் தாத்தா செம பிஸியாக இருந்தார். ஆனாலும் இருவரும் இரண்டு வேளையும் கை கோத்து வாக்கிங் செல்வார்கள். `பண்ணையாரும் பத்மினி'யும்போல காரை ரிவர்ஸ் எடுக்கத் தெரியாத தாத்தாவை வைத்துக்கொண்டு, `கோயிலுக்கு காரில்தான் போவேன்' எனப் பாட்டி அடம்பிடித்து அழைத்துச் செல்வார்.

அவரும் ஸ்டீயரிங்கையும் பிரேக்கையும் தேடித் தேடி எப்படியோ கார் ஓட்டிக்கொண்டிருந்தார்.
ஹனிமூன் தம்பதிகளைப்போல இருக்கும் அவர்களைப் பார்க்கும்போது, `வயதாவதில்கூட இத்தனை இனிமை இருக்கிறதா!' எனத் தோன்றும், மூன்று மாதத்தில் பாட்டி திடீரெனப் படுக்கையில் வீழ்ந்தார். கேட்டால், `ஆட்டோ இம்யூன் டிசீஸ்' (Auto Immune Disease), அதாவது நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாகக் குன்றிப்போக, நம் உடலே நம்மைத் தாக்கும் நோயாம் அது.

நிறைய மருந்துகள், அதன் விளைவாகப் பாட்டிக்கு பேச்சு சரியாக வரவில்லை. முடிகொட்டத் தொடங்கியது. பார்க்கவே மிகப் பரிதாபமாக இருந்தார். இருந்தும், தாத்தா நம்பிக்கையைவிடவில்லை. இன்னமும் இரு வேளையும் அக்கினியை வலம் வருவதாக அவர் கைபிடித்து வாக்கிங்குக்குப் பழக்கிக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் பெண்ணும், அமெரிக்கா பையனும், மயிலாப்பூரில் இருக்கும் இளைய மகனும் புது வீட்டைக் கட்டி முடிக்க நெருக்கடி காட்டினார்கள். பெரிய பூசலுக்கு இடையில் தாத்தா சொன்ன ஒரு வார்த்தை, `வேலைக்குப் போய்ச் சம்பாதிக்கணுமேனு 20 வருஷம் ஓடி ஓடிப் படிக்க வச்சேன். உங்களைக் காப்பதணுமேனு 40 வருஷம் ஓடிட்டேன். இனியாவது வாழலாம்னு பார்த்தா….' எனப் பாட்டியைக் காட்டி அழத் தொடங்கிவிட்டார்.

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கென இருக்கும் வாழ்க்கையை `பணி ஓய்வுக்குப் பிறகான திட்டம்' (After Retirement Plan) ஆகவே வைத்திருக்கிறார்கள். ஆண் குழந்தைகள் என்றால், பிறக்கும்போது கிடைக்கும் அரவணைப்புகூடப் பல நேரங்களில் அனைவரையும் காப்பற்றவேண்டிய கடமைகளுடனேயே கட்டுண்டு இருக்கும். பெற்றோரின் வாழ்க்கைத்தரத்துக்கு ஏற்ற கல்வியே அவர்களின் தேர்வாக இருக்கும். இதனால் அறிவியல் விரும்பிகள்கூட, `அக்கவுன்ட்ஸ் எடுத்தால் ஈசியாக வேலை கிடைக்கும்' எனக் காமர்ஸில் காம்ப்ரமைஸ் ஆவதும் உண்டு. கல்லூரி முடித்த பியர் பிரஷரில் (Peer Pressure) நண்பர்களைப்போலவே தானும் செட்டில் ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் உண்டாகும் இதனால் உயர்கல்வி பெரும்பாலும் வருமானத்துக்குத் தடையானதாகக் கருதப்பட்டு, புறக்கணிக்கப்படும்.

வீட்டுக்கு ஏற்ப வருமானத்தை உயர்த்துக்கொள்வது, உயர்த்திய வருமானத்தை தக்கவைத்துக்கொள்வது எனச் சாமானிய ஆண்களின் அழுத்தங்கள் அத்தனையும் பொருளாதாரத்தை முன்வைத்த ரேஸ் குதிரைகளாகவே மாற்றிக்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே தன்னைப் புரிந்துகொண்ட மனைவி அமைய வேண்டும்; அவள் அனைவருக்கும் பிடித்தவளாகவும் இருக்க வேண்டும்; குறிப்பாக, அவளுக்கும் இந்த ரேஸ் குதிரைக்கு இணையாக நின்ற இடத்தில் ஓடத் தெரிய வேண்டும் என இவர்களின் அழுத்தம் மொத்தமும் சர்வைவலை நோக்கியே அழுத்தப்பட்டிருப்பதை உணரும்போது, அவர்களுக்கு வயது 60-ஐத் தாண்டிவிடுகின்றது. வாசலில் நோயை வைத்துக்கொண்டு, கையில் அதைச் செலவிடச் சிறு பணத்தையும் சேர்த்துக்கொண்டு, இறப்புக்காகக் காத்திருக்கும் இந்தச் சிறு நொடிதான் அவர்களை, அவர்களுக்காக வாழவிடப்போகும் சமுதாயத்தின் புறக்கணிப்பு எனும் நிர்பந்தமாக உள்ளது.

ஆண்கள் இல்லாத சமுதாயத்தில் காதல் இருப்பதில்லை. காதலைப் போற்றாத சமுதாயம் ஆரோக்கியமானதும் அல்ல. காதலையும் கண்ணியத்தையும் காக்கும் ஆண்மைதான் இந்தச் சமுதாயத்தைக் காக்கும் சூப்பர் ஹீரோ. எனவே,
* `சம்பாதித்த பிறகு வாழ்ந்துகொள்ளலாம்' என வாழ்க்கையைத் தள்ளிப் போடாதீர்கள்.
* பணம் என்பது வாழ்க்கையைத் தக்கவைக்கும் முயற்சி மட்டுமே. ஆனால், அன்புதான் வாழ்க்கைக்கானது என நம்புங்கள்.
* `ஆண்களுக்கு நோய் வராது' எனத் தப்புக் கற்பிதம் கொள்ளாதீர்கள். இள வயது மாரடைப்பு இந்தியாவில்கூட சகஜமாகிவிட்டது. எனவே, உழைப்புக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவையும், அடிக்கடி உடற்பயிற்சியையும் கட்டாயமாக்கிக்கொள்ளுங்கள்.
* பெற்றோரைக் காப்பதன் மூலம் உங்கள் மதிப்பை உங்கள் பிள்ளைகளுக்கும் காட்டுங்கள்.
* மனைவியைப் போற்றுங்கள். அதன் மூலம் பெண்களின் மீதான கண்ணியத்தை மகளுக்கும் மகனுக்கும் உதாரணமாகுங்கள்.
* உற்றாரைப் போற்றுங்கள். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. இதில் பலருக்குக் குற்றம் பார்க்கும் சுற்றமாக நாமும் இருந்திருப்போம்.
* `குழந்தைகள் உங்களைக் காப்பாற்றுவார்கள்' என உங்கள் பெற்றோர் உங்களுக்கு வைத்த நிர்பந்தங்களை நீங்களும் சுமந்துகொண்டு மன அழுத்தம் கொள்ளாதீர்கள். நிர்பந்தமற்ற அன்பு உங்கள் தேவைகளை அதுவாகவே புரியவைத்துவிடும்.
* கண்ணியமான பெண் தோழமையைத் தயக்கமின்றித் தொடருங்கள். அது பெண்ணின் மீதான உங்கள் புரிதலை அதிகமாக்கி, உங்கள் குடும்பத்தின் மேன்மையிலும் வழிகாட்டும்.
* உலகில் நிகழும் வன்மங்களுக்கு இசையாமலும், குறிப்பாக பாலியல் சார்ந்த விஷயங்களில் தனிமனித ஒழுக்கம் போற்றுவதும், பாலினம் சாராமல் மனிதர்கள் நிகழ்த்தவேண்டியது எனச் செயல்படுங்கள்.
* `ஆண் என்றால் எதையும் தாங்குபவன்' என்ற மனநிலையில் வெறும் அழுத்தங்களை மட்டும் உள்வாங்காமல், அழுத்தம் போக்கும் ஹாபி ஒன்றில் இணைந்திருங்கள்.
* `ஆண்கள் அழக் கூடாது' எனச் சொல்லியே அழுகையால் தீர்க்கவேண்டியதை ஆத்திரத்தாலும் வன்மத்தாலும் தீர்க்க முடியாமல் நீட்டிக்கொண்டிருக்கிறோம். எனவே, தேவையான நேரத்தில் மனம்விட்டு அழுங்கள். அது உங்கள் மனச்சுமையை நீக்கி, வாழ்க்கையை லேசாக்கும்.

`பாட் மேன்' என்கிற சூப்பர் ஹீரோவை நம் எல்லோருக்கும் தெரியும். அதுவும் க்ரிஸ்டோபர் நோலன் எடுத்த திரைப்படங்களில் வரும் சூப்பர் ஹீரோ, சாகசங்கள் செய்யும் ஒரு முகமும் சராசரியாக வேலை பார்க்கும் இன்னொரு முகமும்கொண்ட இரட்டை வேடம் போடும். இதுவும் சில சராசரி சூப்பர் ஹீரோ கதைதான் என்றாலும், சூப்பர் ஹீரோவாக இருப்பதன் காரணமாக அவருக்கு இருக்கிற பெரும் பொறுப்புகளால் ஏற்படும் மனஅழுத்தம், அவரை ஒரு சராசரி மனிதனாக வாழவிடாத ஏக்கம் ஆகியவற்றை திரைப்படத்தில் சித்தரித்திருப்பார்கள். அவர்கள் மீட்பர்களாகவோ, காப்பாற்றுபவர்களாகவோ வலம் வந்தாலும், ஒரு மெல்லிய சோகமான வயலின் மீட்டல், பின்னணி இசையில் சோக கீதமாக இழையோடும். அவர்களின் ஒரு சமூகத்துக்கான பொறுப்பைப்போல, ஒரு குடும்பத்தைப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு, எத்தனையோ கதாபாத்திரங்களை ஏற்று போராடி, தோல்வியுற்றாலும் மறைத்துக்கொண்டு, ஜெயித்தாலும் நிதானத்தோடு குடும்பம் நடத்தும் எல்லோரும் சூப்பர் ஹீரோக்களே என்று எண்ணவைக்கிறது.

தன்னைத் தானே அறியும் முயற்சி, மனஅழுத்தம் அற்ற நிறைவான வாழ்வுக்கு முன்னோடி. தானும் வாழ்ந்து பிறரையும் வாழவைக்கும் அனைவருமே முகப்பு அட்டையில் இடம்பெறாத சூப்பர் ஹீரோக்கள்தான்!
http://pettagum.blogspot.com/2017/03/blog-post_55.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts